இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடர்ந்து, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அஸ்வினும், ஜடேஜாவும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களையும், ஜடேஜா 86 ரன்களையும் குவித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.