நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் 125க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை உடைத்து பணம் கொள்ளையடித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள், கனரக லாரியின் மூலம் நாமக்கல் வழியாக தப்ப முயன்றனர். அப்போது அவர்களைச் சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற 6 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணா, கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை, திருச்சூர் ஏ.டி.எஸ்.பி. கிரேஷ் குமார் நாயர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பிடிபட்ட வடமாநில கொள்ளை கும்பல், தென்மாநிலங்களில் 126 வங்கி ஏடிஎம்களிலும், 17 வங்கிகளிலும் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையடித்த பணத்தை யாரிடமெல்லாம் கொடுத்து வைத்துள்ளார்கள், எங்கெல்லாம் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர் என்பது குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஹரியானா போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் ஹரியானா மாநில காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் தமிழகம் வந்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கொள்ளையடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் வழியாக தப்ப முயன்ற கொள்ளையர்களின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.