பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
114-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அதன் சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.
மன் கி பாத்தின் 10 ஆண்டுகாலப் பயணம், ஒவ்வொரு அத்தியாயமும் புதிய சாதனைகள், புதிய பதிவுகளை உள்ளடக்கியது. புதிய ஆளுமைகள் அதில் சேர்க்கப்படுகின்றன.
எந்த வேலையாக இருந்தாலும் சரி. நம் சமூகத்தில் கூட்டு உணர்வுடன் நடைபெறுவது, “மன் கி பாத்” மூலம் அங்கீகாரம் பெறுகிறது, “மன் கி பாத்” க்கு வரும் கடிதங்களைப் படிக்கும்போது என் இதயமும் பெருமிதம் கொள்கிறது.
பார்வையாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் என்றும் பிரதமர் கூறினார்.
கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போதிய மழை பெய்து வரும் நிலையில், நீர் பாதுகாப்பின் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். மத்திய பிரதேச மாநிலம் ஜான்சியில் குராரி ஆற்றில் கழிவுகளை அகற்றி மகளிர் சுய உதவிக் குழுவினர் புத்துயிரூட்டியதை பிரதமர் மோடி பாராட்டினார்.
இதேபோல திண்டோரி தாலுகா ராய்புரா கிராமத்தில் பெண்களே குளத்தை வெட்டி, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்தை பிரதமர் மோடி சுட்டிக்காட்டி, வாழ்த்தினார்.
மேலும் தூய்மை பாரத திட்டத்தின் மூலம் கழிவுகளிலிருந்து கலை பொருட்கள் தயாராவதாக கூறிய பிரதமர் மோடி, இதை பொதுமக்கள் தங்கள் வாழ்வின் அங்கமாக மாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள 4,000 ஆண்டுகள் பழமையான இந்திய கலைபொருட்களை ஒப்படைக்க அந்நாட்டு அரசு முன்வந்தது மகத்தான சாதனை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.