தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்களை எல்லாம் பொய்யாக்கி, ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பாஜக பெற்றிருக்கிறது. இந்த அபார வெற்றியை மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான தர்மேந்திர பிரதான் உருவாக்கித் தந்திருக்கிறார். யார் இந்த தர்மேந்திர பிரதான் ? இந்த ஹாட்ரிக் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1983ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இணைந்த தர்மேந்திர பிரதான் தனது நிர்வாகத் திறனால், படிப்படியாக வளர்ந்தார்.
தர்மேந்திர பிரதான் 2000ம் ஆண்டில் ஒடிசாவின் பல்லல்ஹாரா தொகுதியிலும், 2004 ஆம் ஆண்டில் தியோகர் தொகுதியிலும் போட்டியிட்டார். 2009ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த தர்மேந்திர பிரதான் தேர்தல் அரசியலிருந்து விலகினார்.அடுத்த ஆண்டே, பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டார்.
தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில், பீகாரில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில், பெட்ரோலிய அமைச்சராக இருந்தார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்தபோது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு எட்டு மில்லியனுக்கும் அதிகமான எல்பிஜி இணைப்புகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் வெற்றியால், மக்களால் ‘உஜ்வாலா நாயகன்’ என்ற போற்றப்படுகிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்,சம்பல்பூர் தொகுதியில் 100,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மத்திய கல்வி அமைச்சரானார்.
தர்மேந்திரா பிரதானின் அரசியல் புத்திசாலித்தனம் அபாரமானது. மேற்கு வங்கத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் கணிசமான வெற்றிக்கு வித்திட்டவர் இவர். நந்திகிராமில் பிரதானின் திறமையால், பாஜகவின் சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கடித்தார்.
அதேபோல், 2017ம்ஆண்டு, உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் தர்மேந்திரா பிரதான். 70க்கு 75 தொகுதிகளை வென்று உத்தர்காண்டில் பாஜகவுக்கு பெரும் வெற்றியைக் கொண்டு வந்து தந்திருக்கிறார்.
மேலும், 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டமன்றத்தில் 255 இடங்களைக் கைப்பற்றி பாஜகவுக்கு அபார வெற்றிக் காரணமாக இருந்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத், மீண்டும் முதல்வரானதுக்கு தர்மேந்திர பிரதானின் தேர்தல் வியூகமும் அதற்கேற்ற செயல்பாடுகளுமே காரணம் என்பது உண்மை.
தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு, ஒடிசா சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டார். 78 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்தது.
தர்மேந்திர பிரதானின் தேர்தல் வியூகம் வெற்றிக்கு உத்தரவாதம் என்பதால், ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பொறுப்பாளராக பாஜக நியமித்தது.
ஜாட் சமூகத்தினரின் அதிருப்தி, விவசாயிகள் போராட்டம் மற்றும் அக்னிவீர் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பு என பாஜக ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை காரணமாக, ஹரியானாவில் உள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் 5 இடங்களில் பாஜக தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஹரியானா சட்டமன்ற தேர்தல் களத்தில் இறங்கிய தர்மேந்திர பிரதான் , ஓபிசி முகமான நயாப் சிங் சைனியை முன்னிறுத்தி வியூகம் அமைத்தார். பாஜக வெற்றி பெற்றால், நயாப் சிங் சைனி தான் முதல்வர் என்பதில் திட்டவட்டமாக இருந்தார்.
சட்டமன்ற தேர்தலில் நடப்பு எம்.எல்.ஏ.க்களுக்குப் பதிலாக புதிய முகங்களை நியமித்த தர்மேந்திர பிரதான், பலவீனமான வாக்குச் சாவடிகளை அடையாளம் கண்டு, அதனை பாஜகவுக்குப் பலமான வாக்கு சாவடியாக மாற்றிக் காட்டினார்.
உள்ளூர் கட்சி ஊழியர்களுடன் நேரடியாக பழகி அவர்களிடமிருந்து கருத்துக்களை வாங்கி, மாநிலத்தில் கட்சியின் அதிர்ஷ்டத்தை மாற்றும் திட்டங்களைத் தர்மேந்திர பிரதான் தீட்டினார்.
பாஜகவுக்கு தொடர் வெற்றிகளை அள்ளி தந்த தர்மேந்திர பிரதான் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் நம்பிக்கை பலனளித்திருக்கிறது. எனவே, பாஜகவின் தேசிய தலைவராகும் வாய்ப்பும் தர்மேந்திர பிரதானுக்கு காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கப் படுகிறது.