பாஜக ஆட்சி 3-வது முறையாக அமைந்த பின் 9 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியின் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் அனைத்து துறைகளும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.
மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைத்து 125 நாட்களை நிறைவு செய்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இந்த 125 நாட்களில் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 125 நாட்களில் 15 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், 8 புதிய விமான நிலையங்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
இந்த 125 நாட்களில் நாடு முழுவதும் 90 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.