கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையிலும் மிகப்பெரிய அளவில் நூலகம் அமைக்கப்படவுள்ளது. 8 தளங்களுடன் சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.
கோவையில் 126 கோடி ரூபாயில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர், இதன் மூலம் சுமார் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார். அத்துடன், கோவையில் 17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் எனவும், விளைநிலங்களை ஒட்டிய இடங்களில் யானைகள் நுழையாத வகையில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிந்து சென்ற முதலமைச்சரிடம் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.