அதிமுக-வின் செயல்பாடுகளை 234 தொகுதிகளிலும் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக-வின் வார்டு, கழகம், வட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதனை மேம்படுத்துவதற்காக அண்மையில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்தும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதிமுகவின் அமைப்பு ரீதியிலான அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அங்கிருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்தைப் பெற்று டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக கட்சிப் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகள் யாராக இருப்பினும் அவர்கள் குறித்து பாரபட்சமின்றி அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கள ஆய்வுக் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.