மதுரை முல்லை நகரில் வசிப்பவர்களை வீட்டை காலி செய்யுமாறு அவசரப்படுத்தக் கூடாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் அரசை வலியுறுத்தியுள்ளார்.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகரில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் வசிப்பதாகவும், உடனடியாக அவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இங்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமசீனிவாசன், நிலம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
ஆகையால், உடனடியாக இடத்தை காலி செய்யும்படி மக்களை அரசு அதிகாரிகள் அவசரப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தினார். மேலும், அதிகாரிகளின் செயலால் முதியவர்கள், மாணவ – மாணவியர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராம சீனிவாசன் தெரிவித்தார்.