வளர்ச்சியடைந்த மாடல் எனக்கூறும் திராவிட மாடல் ஆட்சியில்தான் அரசு மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியில் உள்ள நஞ்சுண்டாபுரம் சாலை பேருந்து நிறுத்தத்தில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி ஸ்ரீனிவாசன், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தனிப்பட்ட சம்பவமாக கருதாமல், அரசின் தோல்வியாகவே கருதுவதாக தெரிவித்தார்.
மேலும், அரசு மருத்துவமனைகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நேரம் இது என குறிப்பிட்ட அவர், வளர்ச்சி அடைந்த மாடல் எனக்கூறும் திராவிட மாடல் ஆட்சியில்தான், அரசு மருத்துவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் விமர்சித்தார்.