சபரிமலையில் சுவாமி ஐயப்பனின் உஷ்ணம் தணிக்க நடைபெறும் களபாபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு, தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நெய்யபிஷேக பூஜையால் ஏற்படும் உஷ்ணத்தை தணிக்க, சுவாமி ஐப்பனுக்கு தினசரி களபாபிஷேக பூஜை நடத்தப்படுகிறது.
தந்திரி மற்றும் நம்பூதிரிகளால் தங்கத்தாலான பிரம்ம கலசத்தில் நிறைக்கப்பட்ட சந்தனம் மற்றும் குங்குமத்தை வைத்து சுவாமி ஐயப்பனுக்கு களபாபிஷேக பூஜை நடத்தப்படுகிறது.
இந்த பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு 38 ஆயிரத்து 400 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு, பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது.
இதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு சர்வ ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் களபாபிஷேக பூஜையில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜனவரி 19-ம் தேதி வரை களபாபிஷேக பூஜைகள் நடைபெறும் என தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.