மகாராஷ்டிரா தேர்தல் முடிவு, உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி இமாலய வெற்றி பெற்றதையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், எதிர்மறையான மற்றும் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என தெரிவித்தார். பாஜகவின் வெற்றிக்காக ஷிண்டே, ஃபட்னாவிஸ் உள்ளிட்டோரின் உழைப்பை பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
நாடு வளர்ச்சியை மட்டுமே எதிர்நோக்குகிறது என கூறிய பிரதமர் மோடி, பாஜகவுக்கு வாக்களித்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் வரலாற்று சாதனை வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளதாகவும், பொய்யும், வஞ்சகமும் படுதோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது எனவும், அனைத்து தரப்பு மக்களும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் எனவும் பிரதமர் மோடி கூறினார்.