பொதுவுடைமை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள் அரசியலமைப்பின் முன்னுரையில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அரசியலமைப்பு சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு 42வது முறையாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அரசியலமைப்பு முன்னுரையில் பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு உள்ளிட்ட வார்த்தைகள் புதிதாக சேர்க்கப்பட்டன.
இதை எதிர்த்து பல்ராம் சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதேப்போல் மேலும் 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பொதுவுடைமை, மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற சொற்கள் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். முன்னுரையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த சொற்கள், அரசுகளால் பின்பற்றப்படும் சட்டங்கள் அல்லது கொள்கைகளை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதை எதிர்ப்பதில் நியாயமான காரணங்களே இல்லை என குறிப்பிட்டு, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.