வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதையல் இருப்பதாக கருதி மர்ம நபர்கள் மலையில் பூஜை செய்வதால் நரபலி கொடுக்கப்படுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.
தட்டப்பாறை அடுத்த மூலக்கொல்லி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தை ஒட்டி உள்ள வைரக்கல் மலையில் புதையல் இருப்பதாக கருதி, வட மாநிலத்தை சேர்ந்த சிலர் இரவு நேரத்தில் பூஜைகள் செய்வதாக புகார் எழுந்தது.
அந்நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருந்தபோதும் மீண்டும் சிலர் இரவு நேரத்தில் பூஜைகள் செய்வதாகவும், அப்போது பலத்த சத்தம் கேட்பதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மலையில் பூஜை நடைபெறும்போது நரபலி கொடுக்கப்படுகிறதா எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.