பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திரும்ப பெற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, பிரதமரின் விஸ்வகர்மா திட்டமானது சாதி அடிப்படையில் உள்ளது என்ற பொருள்பட முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்..
உப்பு சப்பில்லாத காரணங்களை குறிப்பிட்டு அதை பரிந்துரைகளாக தமிழக அரசின் சார்பாக சொல்லி விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று முதலமைச்சர் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விஸ்வ கர்மா திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டுமெனவும் எனவும். அப்போது தான் பெரு நிறுவனங்களின் பெரு முதலாளிகளுடைய ஆதிகத்தை அகற்றி, காலங் காலமாக உழைத்து வரும் கைவினைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும் எனவும் பதிவிட்டுள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடெங்கும் கிராமங்கள், நகரங்களில் உள்ள கைவினைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படாதது வேதனை அளிப்பதாக கைவினைஞர்கள் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். திமுகவின் அரசியல் ஆதாயங்களுக்காக திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைத்து விட வேண்டாமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.