பாம்பன் ரயில்வே புதிய பாலத்தின் உறுதித்தன்மையில் குறைபாடுகள் உள்ளதால் ரயில் சேவை தொடங்குவதை ஒத்திவைக்க வேண்டுமென தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் தீவு பகுதியினை நாட்டின் நில பரப்புடன் இணைக்கும் வகையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ரயில் பாலம் கடல் காற்றின் அரிமானத்தால் வலுவிழந்தது. இதையடுத்து தேவையை கருத்தில் கொண்டு புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்திரி தலைமையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் செளத்திரி வெளியிட்ட அறிக்கையில், புதிய ரயில்வே பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்து அதை சரி செய்த பிறகு மீண்டும் அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.
அதுவரை ரயில் சேவை தொடங்குவதை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.