சேலத்தில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே வர முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மழை காரணமாக உழவர் சந்தைகளில் மட்டுமின்றி சாலையோரங்களில் செயல்படும் காய்கறி கடைகளும் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மின் விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
இதேபோல் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், பெருந்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
விருதுநகரில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சீரமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.