செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், கடல்சார் அறிவியல் என அனைத்துவிதமான தொழில்நுட்பங்கள் அடங்கிய தொழில்நுட்பக் கண்காட்சி சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்று வருகிறது. மாணவர்களே ஒருங்கிணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.
ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பத் திருவிழாவான சாஸ்திரா 2025 நிகழ்ச்சி சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்று வருகிறது. வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மிகப்பெரிய தொழில்நுட்ப திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் ஏராளமான துறை சார்ந்த கண்டுபிடிப்புகளை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.
ரோபோடிக்ஸ் உள்ளிட்ட எதிர்காலத்தை மையமாக வைத்து வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர் கல்லூரி மாணவிகள்,
அனைவருக்கும் ஐஐடி என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பொதுமக்களும், நேரடியாகவே ஐ.ஐ.டி வளாகத்திற்கு வந்து மாணவ, மாணவியர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வகங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 130 அரங்குகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல், கணினி அறிவியல், சுகாதாரம், நிதி சார்ந்தது என ஏராளமான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
500க்கும் அதிகமான ஐஐடி மெட்ராஸ் மாணவர்களே நிகழ்ச்சி முழுவதையும் ஒருங்கிணைத்து வருகின்றனர். மாணவர்களே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவது புதுவித அனுபவத்தை கொடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிவாற்றல் சார்ந்த விசயங்கள் மட்டுமல்லாது விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்தவையாக இந்த தொழில்நுட்பத் திருவிழா அமைந்துள்ளது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் என பல வகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன
சாமானிய மாணவ, மாணவியர்களுக்கு எட்டாக்கனி என கருதப்படும் ஐஐடி. தற்போது அனைவருக்கும் ஐஐடி என்கிற திட்டத்தால் அனைத்து தரப்பினரும் எட்டிப்பிடிக்கும் தூரத்திற்கு வந்திருக்கிறது.