அமெரிக்காவில் பிற நாட்டவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவை நிறுத்த வேண்டுமென வலதுசாரிகள் குரல் கொடுத்து வருவது, அங்குள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல காத்திருக்கும் இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் OTP எனப்படும் ஆப்ஷனல் பிராக்டிகல் டிரைனிங் மூலம், அங்குள்ள ஐடி உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவதற்காக H-1B விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா அவர்கள் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வழிவகை செய்கிறது.
இந்த விசாவை 10-க்கு 7 என்ற விகிதத்தில் இந்திய மாணவர்களே பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த 2023-2024-ம் ஆண்டில் மட்டும் 97 ஆயிரத்து 556 இந்திய மாணவர்கள் OTP செயல்முறை திட்டம் மூலம் H-1B விசாவுக்கு பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அண்மையில் அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீராம் கிருஷ்ணனை, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் AI ஆலோசகராக நியமித்தது முதல், குடியேற்றங்கள் தொடர்பான விவாதங்கள் அமெரிக்காவில் மீண்டும் தலை தூக்கியுள்ளன.
குறிப்பாக H-1B விசாவால் அமெரிக்கர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, H-1B விசாவை நிறுத்த வேண்டுமென அமெரிக்க வலதுசாரிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த கருத்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், குடியரசு கட்சியைச் சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்ட பலரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இதனால் அவ்விருவரும் வலதுசாரிகளால் வசைபாடப்பட்டு வந்த நிலையில், H-1B விசாவுக்கு எப்போதும் ஆதரவாகவே இருந்துள்ளேன் என அதிபர் டிரம்ப் கூறியது சூடுபிடித்த விவாதங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில் திடீரென U-Turn அடித்த எலான் மஸ்க், H-1B விசாவிற்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக்கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். மஸ்கின் கருத்தை தொடர்ந்து H-1B விசாவுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு ஆப்ஷனல் பிராக்டிகல் டிரைனிங் எனப்படும் பணிரீதியான பயிற்சி வழங்குவதற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா? இந்திய மாணவர்களின் அமெரிக்க கனவை நிர்மூலமாக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.