சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் நாட்களில் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி கோடிக்கணக்கானோர் உயிரை பலிவாங்கியது.
இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அதே சீன நாட்டில் தற்போது அதிகளவில் பரவி வருவதால்தானோ என்னவோ, எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று இந்திய மக்கள் மனதில் கிலியை கிளப்பியுள்ளது.
ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்றழைக்கப்படும் இந்த தொற்று, மழைக்காலங்களில் பரவும் மற்ற வைரஸ் தொற்றுகளைப்போல காய்ச்சல், சளி, இருமல், சுவாச அசவுஹரியம், உடல் வலி போன்றவற்றை ஏற்படுத்தும். மற்றபடி உயிர் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்பதால், எச்.எம்.பி.வி வைரஸ் பரவுவதை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இந்த எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் இந்த வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால், இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரைச் சேர்ந்த 3 வயது பெண் மற்றும் 8 மாத ஆண் குழந்தைகளிடம் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3 வயது பெண் குழந்தைக்கு உடல் நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், 8 மாத ஆண் குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் மக்கள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், “இது புதிய வைரஸ் தொற்று அல்ல, 20 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்ட சாதாரண வைரஸ் தொற்றுதான்” என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் பிரசன்ஜித் சௌத்ரி என்பவர், PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்டதுதான் என்பதால், இதை எண்ணி மக்கள் கவலைப்பட அவசியமில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம் எனவும், சுவாச பிரச்சனை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.