திமுக எம்பி கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரியின் சர்வர் ரூம்க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின்போது சர்வர் ரூம்க்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது.
சர்வர் அறையின் சீலை அகற்ற உத்தரவிடக்கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், கிங்ஸ்டன் கல்லூரியில் தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதாகவும், சர்வர் அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில், சோதனையின்போது கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்காததால் சர்வர் அறைக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தேவைப்பட்டால், மனுதாரர் சட்டப்படி நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.