நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
டெல்லியில் நேற்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், ஸ்ரீ ஜி. கிஷன் ரெட்டியை, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமவளத் தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுச் சின்னம் மற்றும் ஏராளமான கலாசார பாரம்பரிய இடங்கள் அடங்கியுள்ளதாக மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். விவசாய குழுவின் பேச்சை பொறுமையாக கேட்ட மத்திய அமைச்சர், பல்லுயிர் மரபு பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.