தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூர் கணக்கம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக சாடினார்.
திருப்பூர் கணக்கம்பாளையத்தில் காமராஜர் கலாம் அறக்கட்டளை சார்பில் 1330 திருக்குறளையும் 1330 மாணவ, மாணவிகள் மழலை மொழியில் கூறி உலக சாதனை படைக்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நமது அவ்வைப் பிராட்டியார், அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி, குறுகத் தரித்த குறள் என்று சொன்னதுபோல, உலகின் அத்தனை ஞானங்களும் நிறைந்தது திருக்குறள். உலக நாடுகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்படியானது திருக்குறள் என்பது நமக்கெல்லாம் பெருமை. மகாத்மா காந்தியடிகளுக்கு, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய கடிதத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தமக்கு எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் திருக்குறளில் விடை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி, எக்காலத்திலும், எல்லாருக்கும் பொருத்தமானதாக இருக்கிறது திருக்குறள் என தெரிவித்தார்.
குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம், பெரியவர்கள் உலகம் என இரண்டு உலகங்கள் உள்ளதாகவும், குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம் அன்பு நிறைந்த உலகம் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக என்றாலே நாடக கம்பெணி என்றும், வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள திரைக்கதை, வசனம் கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக கூறினார்.‘
இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளதாகவும், இது திமுக எழுதியுள்ள கதை வசனம் என தெரிவத்தார் சிபி ஐ விசாரணையை தடுப்பது ஏன் என்றும், இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சியினரை எதிர்ப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.