எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றதாக குற்றஞ்சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், ராகுலின் இந்த தவறான தகவல் நாட்டின் சர்வதேச மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்திக்கவே அங்கு பயணம் மேற்கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அங்கு நடந்த இந்திய தூதரக தலைமை அதிகாரிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுலின் இந்த பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம் என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அவை சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையைக் சீர்குலைக்கும் எனவும் சாடியுள்ளார்.