அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் இன்று மாலை அமிர்தசரஸ் வருகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியிருப்பவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி 18 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், முதல் கட்டமாக 205 இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. டெக்ஸாசில் முகாமில் இருந்து 205 இந்தியர்கள் நேற்று ராணுவ விமானம் புறப்பட்டது. இந்த விமானம் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு தங்கள் உழைப்பின் மூலம் நீண்ட ஆண்டுகளாக பங்களித்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறினார். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அடுத்து வாரம் சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.