ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மற்றும் தனிநபருக்கு சொந்தமான அரிசி மண்டி மீது கடந்த 2ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பாட்டில்களை வீசி சென்றனர்.
இது தொடர்பாக 7 தனி படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி சரித்திர பதிவேடு பகுதியில் ஹரி என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது தந்தை மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ஹரி, பரத், விஷால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். குண்டடிப்பட்ட ஹரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பரத், விஷால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஹரியின் தந்தை தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைது நடவடிக்கையின்போது தப்பியோட முயன்றபோது கை, கால்களில் அடிபட்ட தமிழரசன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.