நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க தமிழக அரசு கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் அனுமதி அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒருமுறை ஆளுநர் நிராகரித்த மசோதாவை அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது அந்த மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால் அது சட்டமாகிவிடும் என்றும்,
தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோருவதாகவும் பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தார் என்றால் அது எந்த பிரிவின் படி? என்று கேட்டதுடன், அதற்கு அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா? என்றும் வினவினர்.
அதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், இந்த விஷயத்தில் தனக்கு வேண்டியபடி ஆளுநர் சுயமாக முடிவு எடுத்துள்ளதாக பதிலளித்தார்.
எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், 10 மசோதாக்களை ஆளுநர் ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை விளக்க வேண்டும் என்றுகூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.