சேலத்தில் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா அலுவலகம் அருகே உண்டு உறைவிட பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் நொய்யமலை பகுதியைச் சேர்ந்த இளையகண்ணு என்பவர், 2019-ம் ஆண்டு முதல் தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவிகள் பலமுறை பழங்குடியினர் நலவாரியத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இளையகண்ணுக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக அதிகாரிகள் அவரை வெறுமனே எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்க வந்த குழந்தைகள் நல அலுவலர்களிடம், அப்பள்ளியைச் சேர்ந்த 12 மாணவிகள் இளைய கண்ணுவின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.