மாதம் ஒரு முறை மின்கட்டண வாக்குறுதி என்ன ஆனது? என்றும், திமுக அரசுக்கு காலம் கடந்துதான் புத்தி வருமா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதவில், தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்காலிகப் பணியாளர்களை வைத்து, பராமரிப்புப் பணிகளை மின்சார வாரியம் மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் பொதுமக்களிடம், ரூ.100 – ரூ.150 என கட்டணம் வசூலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது சட்டவிரோதமானது. கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மின்சாரப் பராமரிப்பு தொடர்பான பணிகள் அதிகரிக்கும். பணி நியமனம் மேற்கொள்ளவில்லையென்றால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில், 3 லட்சம் அரசுப் பணிகள் நிரப்பப்படும், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று இளைஞர்களை ஏமாற்றி, மாதம் ஒரு முறை மின்கட்டணம் என்று பொதுமக்களையும் ஏமாற்றி, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, எப்போதும், காலம் கடந்துதான் புத்தி வருமா? என அண்ணாமலை கூறியுள்ளார்.