அமெரிக்கா காசாவைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் ட்ரம்ப், காசாவில் உள்ள பாஸ்தீனர்களுக்கு ஜோர்டான் மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்திய கிழக்கின் சொர்க்கப்புரி காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்பின் திட்டம் என்ன? இதனால் இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் என்னவாகும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் கடந்த 15 மாதங்களுக்கும் பிறகு கத்தார், அமெரிக்க கூட்டு முயற்சியால் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு தரப்பும் பணயக் கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது. இதுவரை 5 முறை பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.
மேலும், காசாவில் நடந்த போர் காரணமாக, புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்புவதற்கும் இஸ்ரேல் அனுமதிக்கிறது.
இதற்காக, வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதியை இணைக்கும் நெட்சாரிம் பாதையில் இருந்து தனது படைகளை இஸ்ரேல் திரும்ப பெற்றுள்ளது. அங்கிருந்த இஸ்ரேல் படைகள், காசாவின் கிழக்கு எல்லையில் உள்ள இஸ்ரேல் ராணுவ முகாமுக்குத் திரும்பியுள்ளன. இதனால், எந்தவித இஸ்ரேல் ராணுவ சோதனையும் இன்றி தெற்கு காசாவில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.
42 நாட்கள் நீடிக்கும் வகையில் ஏற்பட்ட போர்நிறுத்தம் பாதிக்கும் மேல் நாட்களை கடந்து விட்டது. மிச்சம் இருக்கும் இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக, மேலும் சில நாட்கள் போர்நிறுத்தத்தை நீட்டிக்கவேண்டியது அவசியம். எனவே, இது தொடர்பாக இஸ்ரேல்- காசா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , காசாவை வாங்கி அமெரிக்காவுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அமைதியாக வாழ்வதற்கான இடமும் வீடும் கிடைத்தால், பாலஸ்தீனியர்கள் காசாவுக்குத் திரும்ப விரும்ப மாட்டார்கள் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
எனவே ஜோர்டானும் எகிப்தும்,சவுதி அரேபியாவும் , காசாவில் உள்ள பாஸ்தீனர்களுக்கு நிரந்தர புகலிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் முழுமையாக குடியேற்றப்பட்ட பிறகு, காசாவை அமெரிக்கா கையகப்படுத்தி பொருளாதார ரீதியாக காஸாவை மேம்படுத்தும் என்றும் உறுதிப்பட ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ட்ரம்பின் திட்டத்தை “புரட்சிகர, ஆக்கப்பூர்வமான பார்வை” என்று அழைத்த போதிலும், ஜோர்டானின் மன்னர் அப்துல்லா பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிப்பதாகக் கூறினார்.
அதிபர் ட்ரம்பின் யோசனையை நிராகரித்த, ஹமாஸ் தலைவர் இஸ்ஸாத் அல்-ரிஷ்க், வாங்கவும் விற்கவும் கூடிய சொத்து அல்ல காசா, அது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் மீள்குடியேற்றும் ட்ரம்பின் திட்டத்துக்குக் கண்டனம் தெரிவித்த சவுதி அரேபியா, காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிலிருந்து உலகை திசைதிருப்புவதற்கான முயற்சி என்று கூறியுள்ளது.
ஆத்திரமூட்டும் யோசனையை ட்ரம்ப் கூறியுள்ளதாக சொல்லும் கத்தார் அரசு. ட்ரம்பின் காசா திட்டம் சர்வதேச சட்டத்தை மீறுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு வந்த இஸ்ரேல் குழுவினரிடம், கத்தார் அரசு பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
டிரம்பின் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பால் ஏற்படக் கூடிய விளைவுகள் ஆபத்தானவை என்றும், காசாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தின் முடிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே வரும் 27ஆம் தேதி, புதிய மற்றும் ஆபத்தான முன்னேற்றங்கள் என்ற தலைப்பில், அவசர அரபு உச்சி மாநாட்டை எகிப்து அறிவித்துள்ளது. முன்னதாக ஜோர்டானின் மன்னர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்கவே காசா மறுகட்டமைப்பு தீர்வை அதிபர் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ள ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், அதிபரின் திட்டம் பிடிக்கவில்லை என்பவர்கள் தங்கள் திட்டத்துடன் மேசைக்கு வந்து பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
ட்ரம்ப் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளரோ அல்லது தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்க முயலும் ஒரு அரசியல்வாதியோ அல்ல. இப்போது அவர் உலகின் மிக சக்திவாய்ந்த நபராக அமெரிக்காவின் அதிபராக உள்ளார்.
இரண்டாவது முறையாக அதிபராகியுள்ள ட்ரம்பின் கருத்துக்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் உறுதியான கொள்கைகளைக் காட்டினாலும், ரியல் எஸ்டேட் பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் நடைபெறும் சூதாட்ட நகர்வுகளைப் போலவே இருக்கின்றன.
வேறொரு திட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகக்கூட ட்ரம்ப் இப்படி கூறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
காசாவை வாங்கும் ட்ரம்பின் அறிவிப்பை உலகம் கவனித்துக் கொண்டிருக்க, ஈரானுடன் சரிபார்க்கப்பட்ட அணுசக்தி அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை, ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
எப்படி பார்த்தாலும், அமெரிக்க அதிபர்ட்ரம்பின் காசா தொடர்பான நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் ஒரு முடிவற்ற போர் சூழலையே உருவாக்கியுள்ளது.