அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
புதிதாக கட்சி தொடங்கிய ஒருவருக்கு ஜிஎஸ்டி குறித்தும் பட்ஜெட் குறித்தும் தெரியவில்லை என தெரிவித்தார். பட்ஜெட் பற்றி தெரியாமல் குழந்தைகள் பிரிவு வைத்துக்கொண்டு மாற்றத்தை கொடுக்க கட்சி தொடங்கியுள்ளதாகவும் அவர் சாடினார்.
ஊழல் பெருச்சாளிகள் 2026ம் ஆண்டில் சிறைக்கு செல்வதை பார்ப்பேன் என்றும், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இங்கேதான் இருப்பேன் என்றும் அவர் கூறினார்.
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் தமிழக முதல்வருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என கேள்வி எழுப்பிய அண்ணாமலை பணம் கொடுத்து அரிடாபட்டியில் தனக்கு தானே பாராட்டு கூட்டத்தை நடத்தி கொள்வதாக கூறினார்.
தமிழகம் போடும் பட்ஜெட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் கூட்டம் நடத்தியதில்லை என்றும், ஆனால் மத்திய அரசின் போட்ட பட்ஜெட்டுக்கு திமுக பட்ஜெட் கூட்டம் நடத்துவதாக சாடினார். இதன் மூலம் மத்திய பட்ஜெட் சிறப்பானது என தெரியவந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில், தமிழகம் சார்பாகச் சென்றிருக்கும் திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவராவது, தமிழகத்துக்கோ, தங்கள் தொகுதிக்கோ எதுவும் கேட்பதில்லை. தமிழகத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத, அல்லது, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறித்து வெளி வந்திருக்கும் ASER அறிக்கையில், நமது மாணவர்களுக்கு, தாய்மொழியான தமிழையே எழுதப் படிக்கத் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதுதான், திமுக தமிழ் வளர்த்த லட்சணம். இன்னும் எத்தனை நாட்களுக்கு, பிரிவினை பேசி மக்களை ஏமாற்றுவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.