விஞ்ஞானிகளை இன்னும் குழப்பும் 1,200 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் கேதார்நாத் ஆகும். கடுமையான பூகம்பங்கள், அதிகமான பனிப்பொழிவு மற்றும் பல்வேறு இயற்கை பேரழிவுகளைத் தாண்டி இன்றைக்கும், பிரமாண்டமாக திகழ்திறது கேதார்நாத் திருக்கோயில். அந்த அற்புதத் திருத்தலத்தைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவின் புகழ் பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்று கேதார்தாத். இது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், மந்தாகினி ஆற்றின் ஓரமாக கார்வால் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் கேதார் நாத் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.
அற்புதமான இந்த திருத்தலம் , எப்போது யாரால் எப்படி கட்டப்பட்டது என்பது இன்றுவரை தெரியவில்லை. விஞ்ஞானிகளால் கூட கண்டு பிடிக்க முடியாத ஆச்சரியமாகவே கேதார் நாத் திருக்கோயில் அமைத்துள்ளது.
2013ஆம் ஆண்டு, பெரும் வெள்ளத்தில், கேதார்நாத் பகுதி முழுவதும் சேதமடைந்தது.ஆனாலும் இந்த ஆலயத்துக்கு ஒரு சிறிய பாதிப்பும் கூட ஏற்படவில்லை. கோயிலுக்கு முன் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு பெரிய பாறையினால் கோயில் சேதம் இல்லாமல் தானாகவே தடுக்கப் பட்டது.
‘பீம் ஷீலா’ என்னும் அந்தப் பெரிய பாறை, கோயிலுக்குப் பின்னால் அதிசயமாக நிலைநிறுத்தப்பட்டு, வெள்ள நீரைத் திசை திருப்பி, சுவாமி சன்னதியைப் பாதுகாத்ததாக நம்பப்படுகிறது.
கேதார்நாத் என்றால், ‘வயல்கள் நிறைந்த நிலங்களின் கடவுள்’ என்று பொருள். வானிலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டுமே கேதார் நாத்தில் ஈசனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
குளிர்காலங்களில் இக்கோயிலில் உள்ள விக்கிரகம், ‘உக்கிமாத்’ தில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டு, அங்கு நாள்தோறும் வழிபாடு நடத்தப் படுகிறது. புராணப் படி, ஆறு மாதங்கள் தேவர்களாலும், ஆறு மாதங்கள் மனிதர்களாலும் கேதார் நாத் இறைவனுக்கு வழிபாடு நடப்பதாக சொல்லப் படுகிறது.
மேலும், 275 தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் கேதார நாத்தும் ஒரு தலமாகும். இத்தலத்து இறைவனைப் போற்றி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், சேக்கிழார், உள்ளிட்ட அருளாளர்கள் திருப்பதிகம் பாடியுள்ளனர்.
இங்குள்ள 12 அடி உயர சிவலிங்கமானது முக்கோண வடிவில் உள்ளது. இந்த லிங்கம் இயற்கையாகவே உருவானதாகும். இத்தல ஈசனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இக்கோயிலில் சிவலிங்கத்தை பக்தர்கள், தங்கள் கைகளால் தொட்டு பூஜை செய்யலாம். மேலும் தாங்களே சுவாமிக்கு நெய்யால் அபிஷேகம் செய்யலாம்.
மகா பாரத காலத்தில், பஞ்ச பாண்டவர்கள் குருக்ஷேத்ர போரில் தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக சிவபெருமானை வழிபட எண்ணினார்கள். சிவபெருமானோ எருது வடிவம் எடுத்து மறைகிறார்.
எருது வடிவில் இருப்பது சிவபெருமான்தான் என்பதை உணர்ந்த பீமன் அந்த எருதின் கால்களைப் பிடிக்கிறான். அதனையடுத்து, சிவபெருமான் எருதின் ரூபத்தில் ஐந்து புண்ணிய இடங்களில் பாண்டவர்களுக்குக் காட்சி கொடுக்கிறார்.
எருதின் திருமுடி கல்பேஸ்வரில் காட்சியளித்தது. எருதின் முகம் ருத்ரநாத்தில் தோன்றியது எருதின் திமில் கேதர்நாத்தில் தோன்றியது, எருதின் முன்னங்கால்கள் துங்கநாத்தில் தெரிந்தது. எருதின் வயிறுப் பகுதி மத்தியமகேஸ்வரில் காட்சியளித்தது.
அதனையடுத்து பஞ்சப் பாண்டவர்கள் இந்த ஐந்து புண்ணிய தலங்களிலும் சிவபெருமானுக்குத் திருக்கோயில் கட்டினார்கள். இந்த ஐந்து திருக்கோயில்களும் , பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பஞ்ச கேதார கோயில்களைக் கட்டிய பிறகு பாண்டவர்கள் சிவனை வழிபட்டு முக்தி பெற்றனர் என்பது புராண வரலாறு.
இந்த ஐந்து திருக்கோயில்களும், வட இந்தியக் கட்டடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. பஞ்ச கேதார் கோயில்களில் சிவ தரிசனம் முடித்த பிறகு பத்ரிநாத்தில் விஷ்ணு தரிசனம் செய்ய வேண்டும் என்பது மரபாக உள்ளது. பஞ்ச கேதார தலயாத்திரை என்பது, இந்துக்களின் மிக முக்கியமான சிவ யாத்திரையாகும்.
குறிப்பாக, கேதார கௌரி விரதம் இருந்து ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதார்நாத் ஈசனை வழிபடுவது சிறப்பாகும். தற்போதுள்ள கேதார்நாத் கோயிலை, 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் புனரமைத்ததாக கூறப்படுகிறது.