அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
இதனையடுத்து பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அப்போது, பல முக்கியமான துறைகளில் தங்கள் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், பயணங்களை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார்.