சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்ட அறிக்கையில், மெட்ரோ வழித்தடத்தை வெளிவட்டச் சாலையுடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகள் அமைக்கப்படும் என்றும், இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்வது போன்றும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ வழித்தடத்தின் மொத்த நீளம் 15 புள்ளி 46 கிலோ மீட்டர் என்றும், மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கை 13 எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 9 ஆயிரத்து 335 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.