நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற சட்டவிரோத தாதுமணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக 2015ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து 2016ஆம் ஆண்டு முதல் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி கடற்கரைகளில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் எனக்கூறிய உயர்நீதிமன்றம், தாதுமணல் தொடர்பாக ககன் தீப் சிங் பேடி, சத்யபிரதா சாகுவின் அறிக்கை செல்லும் என உத்தரவிட்டது. சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாதுமணலை உடனடியாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆணையிட்டுள்ள உயர்நீதிமன்றம், தடை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட தாதுமணலுக்கான தொகையை தனியார் நிறுவனங்களிடம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கவும், தாதுமணல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற சட்டவிரோத தாதுமணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.