புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்தி மொழி தமிழகத்தில் திணிக்கப்படுவதாகவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் புதிய கல்விக் கொள்கையில் “மொழிகள்” குறித்து என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
புதிய கல்விக் கொள்கை எந்த அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் போது மொழிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில், பல மொழிகளை ஊக்குவிக்கும் வகையில் கற்பித்தல் மற்றும் கற்றுக் கொள்ளுதலில் மொழியின் திறமை என்ற அடிப்படையில் புதியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் திறந்தவெளி பள்ளிகளை மேம்படுத்தவும், அதில் மாநில மொழியிலான பாடப் புத்தகங்களை உருவாக்கவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ம் வகுப்பு வரை அல்லது 8ம் வகுப்பு வரை தாய் மொழி அல்லது அவர்களது வீட்டில் பேசும் மொழி அல்லது மாநில மொழியில் அனைத்து பாடங்களையும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (Next) அதன் பின்னர், தாய்மொழியை மொழிப் பாடமாக கற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட புத்தங்களையும் தாய்மொழியில் உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு முதல் 8 வயது வரை குழந்தைகளுக்கு மொழிகளை கற்றுக் கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் என்றும், (Next) இந்த பருவத்தில் பல மொழிகளை கற்பதன் மூலம் அவர்களது அறிவாற்றல் (Cognitive benefits) பெருகும் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
பல மொழிகளை கற்றுத் தரும் அதேசமயம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மொழிகளை கற்றுத் தருவதற்காக நாடு முழுவதும் ஆசிரியர்களை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ளும் எனவும், இந்திய மொழிகளை கற்றுக் கொள்ள ஏதுவாக வேறு ஒரு மாநிலத்தில் இருந்து ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ள மாநிலங்கள் தங்களுக்குள் ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என்றும் புதிய கல்விக் கொள்கையில் யோசனை வழங்கப்பட்டுள்ளது.
தேச ஒற்றுமை, மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை, மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாட்டின் பன்முக மொழி கலாசாரம் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று மொழிகள் என்ற கோட்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.
அதே சமயம், மூன்று மொழிகள் என்பதை செயல்படுத்தும் போது, எந்த ஒரு மொழியும் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்றும் புதிய கல்விக் கொள்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று மொழிகளில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை மாநில அரசுகள் அல்லது மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அவர்களது தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் யோசனை செய்யவும், பேசவும் ஏதுவாக அறிவியியல் மற்றும் கணிதம் ஆகிய பாட புத்தகங்களை இரு மொழிகளிலும் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் திறமை வாய்ந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை உருவாக்கும் வண்ணம், மாநில சட்ட கல்லூரிகளில் ஆங்கிலத்துடன், அந்த மாநில மொழியில் பாடங்களை நடத்த வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் அரசு கல்வி நிலையங்களில் தாய்மொழியில் பாடங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் உயர்கல்வி நிலையங்களில் தாய்மொழியில் பாடங்களை நடத்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
புதிய கல்விக் கொள்கையில் மொழிகள் குறித்து குறிப்பிட்டுள்ள எந்த ஒரு இடத்திலும் இந்தி மொழியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது கட்டாயமாக்கப்படும் என்றோ அல்லது திணிக்கப்படும் என்றோ குறிப்பிடப்படவில்லை.