தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையில் செல்ல முயன்ற அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் செல்லும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் நகர்ப் பகுதிக்குள் செல்லாமல், பயணிகளை புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கி விட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஊருக்குள் செல்லாமல் சென்ற 5 அரசு பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பேருந்துக்கு தலா 10 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் இது தொடர்ந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஆட்சியர் உத்தரவை மீறி மீண்டும் அரசு பேருந்துகள் ஊருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்ல முயன்றது. அப்போது பேருந்துகளை சிறைப்பிடித்த மக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.