பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கிராமப்புற சாலைகள், ஜல் ஜீவன் திட்டத்தை தொடந்து மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் மருந்தகம் எனும் பெயரில் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதுவரை மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து மாநில அரசு உருவாக்கிய திட்டங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினருமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள்தோறும் புதுப்புது திட்டங்களை தொடங்கி வைப்பதோடு தன் பணி முடிந்துவிட்டதாக முதலமைச்சர் கருதும் நிலையில், அந்த திட்டத்தின் பயன்கள் பொதுமக்களிடம் முழுமையாக சென்றடைவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு தொடங்கி வைக்கும் திட்டங்களில் பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மாற்றி புதிய ஸ்டிக்கரை ஒட்டி மாநில அரசால் தொடங்கி வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
குறைந்த செலவில் தரமான மருந்துகள் விற்பனை செய்யும் நோக்கத்தில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலை வெளிச்சந்தையை விட 50 முதல் 90 சதவிகிதம் வரை குறைவாக விற்கப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டத்தின் பெயரை மாற்றி முதல்வர் மருந்தகம் என ஸ்டிக்கர் ஒட்டி தமிழகம் முழுவதும் ஆயிரம் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.
மத்திய அரசின் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவது முதன்முறை அல்ல என்பதும் திமுக அரசு தொடங்கி வைத்த பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்களே என்பதும் தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் போஷான் திட்டத்தை ஊட்டச்சத்தை உறுதி செய் எனவும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை கலைஞரின் கனவு இல்லம் எனவும், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தை முதல்வரின் கிராம சாலை திட்டம் எனவும் திமுக அரசு பெயர் மாற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் சகி நிவாஸ் திட்டத்தை தோழி விடுதி எனவும், சம்க்ரசிக்ஷா திட்டத்தை மாதிரி பள்ளிகள் எனவும் செயல்படுத்திய திமுக அரசு, பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த விஸ்வகர்மா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அதே சிறப்பம்சங்களை உள்ளடக்கி கலைஞர் கைவினை மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதன் பயன் குறித்து ஆராயாமல் கண்மூடித்தனமாக எதிர்க்கும் திமுக அரசு, தற்போது அதே மத்திய அரசின் திட்டத்தை வேறு பெயரில் உருவாக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது.
தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் திட்டம் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் முடக்கிய திமுக அரசு, மக்கள் நலனுக்கென்று கடந்த நான்காண்டு கால ஆட்சியில் சொல்லும் படியாக எந்தவித திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது.
மக்கள் நலனை மையமாக கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டிய திமுக அரசு, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதிலும், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றுவதிலுமே முழு கவனத்தையும் செலுத்தி வருவது மக்கள் மீதான அதிருப்தியை நாளுக்கு நாள் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசின் திட்டங்களை காப்பியடிக்காமல் சுயமாக சிந்தித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.