முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நிதி ஒதிக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டபேரவையில் அடுத்த மாதம் 14-ம் தேதி 2025 – 2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 15-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இது என்பதால், இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, மும்மொழி கொள்கையை விவகாரம் தொடர்பாகவும், தொழில் வளத்தை பெருக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடி வரும் நிலையில், அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.