சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோரை அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து கைது செய்தது.
இந்த வழக்கில் ஜாமின்கோரி, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாத்துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட தொகையில் சொகுசு கார்கள் மற்றும் சொத்துக்களை ஜாபர் சாதிக் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டப்பட்ட பணத்தை ஜாபர் சாதிக் தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் மட்டுமன்றி, இயக்குனர் அமீரின் வங்கு கணக்கு மற்றும் போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தி இருப்பதாக அமலாக்கத்துறை பதில் மனுவில் குறிபிட்டுள்ளது.
மேலும், ஜாபர் சாதிக் திமுகவின் முன்னாள் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை மார்ச் 11ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்து தள்ளி வைத்தார்.