விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். விமானப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் உதான் யாத்ரீ கபே குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு இருப்பது விமானப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உதான் யாத்ரி கபே எனும் பெயரில் மலிவு விலை உணவகங்களை தொடங்க முடிவு செய்தது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் உதான் யாத்ரி கபே மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய்க்கு அந்த கபேவில் விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த விமான போக்குவரத்து அமைச்சகம் சென்னை விமான நிலையத்திலும் கபே தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் டீ பத்து ரூபாய்க்கும், காபி இருபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர தண்ணீர் பாட்டில், சமோசா, வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களும் குறைவாக விலையில் விற்பனை செய்யப்படுவதால் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
மத்திய அரசின் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் உணவு வகைகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விமான நிலையத்திற்குள் சென்றாலே உணவுக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், குறைந்த விலையில் தரமான உணவுப் பண்டங்களை வழங்கும் இந்த உதான் யாத்ரீ கபே திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் திட்டமாக அமைந்திருக்கிறது.