தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நேற்றைய தினம், கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், திமுகவின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி என்ற பிரிவினைவாத கும்பல், பாரதப் பிரதமர் நரேந்திரமோடி
அவர்களின் உருவப் படத்தை எரித்திருக்கிறது. ஆனால், இது வரை, தமிழக காவல்துறை, இந்தக் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற தமிழக பாஜக கடலூர் மேற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரைக் கைது செய்திருக்கிறார்கள்.
திமுக அரசின் இந்த அராஜகப் போக்கை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக இதற்கு மேல் செயல்படமுடியாது என்ற ரீதியில், தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
உடனடியாக, பாரதப் பிரதமர் உருவப்படத்தை எரித்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும், இல்லையேல், ஏற்படும் பின்விளைவுகளுக்குத் திமுக அரசின் காவல்துறையே பொறுப்பு என்று அண்ணாமலை எச்சரித்து உள்ளார்.