ஈரோடு அருகே சிறுத்தை தாக்கி கால்நடைகள் மற்றும் வளர்ப்பு நாய் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சென்னிமலை அருகேயுள்ள கருஞ்சறையான் தோட்டத்தை சேர்ந்த குணசேகரன், வனப்பகுதிக்கு அருகேயுள்ள தனது தோட்டத்தில் ஆடுகள், மாடுகள் என ஏராளமான கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
கடந்த 27-ம் தேதி இவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி மற்றும் வளர்ப்பு நாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கன்றுக்குட்டி மற்றும் நாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் சிறுத்தை தாக்கி அவை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே கடந்த 23-ம் தேதி குமாரசாமி என்பவரின் தோட்டத்தில் ஆட்டுகுட்டி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கும், சிறுத்தை தாக்குதலே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்ரோன்கள் மூலம் சிறுத்தையை கண்காணிக்க தனிக்குழு அமைத்துள்ள வனத்துறையினர் இவ்விருவரின் தோட்டத்திலும் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்துள்ளனர்.