ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பின் சார்பில் சென்னையில் இருந்து நேபால் வரை பசுமை விழிப்புணர்வை மையப்படுத்தி மூன்று பெண்கள் 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரம் பசுமைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். மூன்று பெண்கள் மேற்கொண்ட பசுமைப் பயணங்களின் அனுபவங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
ரோட்டரி இண்டர்ன்நேசனல் அமைப்பின் சார்பில் சென்னையில் இருந்து நேபால் வரை பசுமை விழிப்புணர்வை மையப்படுத்தி மூன்று பெண்கள் 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரம் வரை காரில் மேற்கொள்ளும் பசுமை விழிப்புணர்வு பயணம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது. நல்லி குழுமத்தின் நிறுவனர் பத்ம விபூஷன் நல்லி குப்புசாமி செட்டி மற்றும் சென்னை ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா ஆகியோர் கொடியசைத்து இந்த பயணத்தை தொடங்கி வைத்தனர்.
ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களான சிவபாலா தேவி, கோதங்கி, சுசித்ரா, சரவண செல்வி ஆகியோருடன்பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கிய பசுமைப் பயணம் சரியாக 17 நாட்களுக்கு பிறகு மார்ச் 2 ஆம் தேதி நிறைவடைந்தது. வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பிய மூன்று பெண்களுக்கு பிரம்மாண்ட வரவேற்போடு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த பசுமைப் பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. பயணத்தின் வழியில் மரம் நடும் நிகழ்வுகளும், விதைகள் பரிமாறும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
15 மாநிலங்கள் மற்றும் 2 நாடுகளை கடந்து 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீடித்த இந்த பயணம் வெற்றியுடன் நிறைவடைந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார், இடைவிடாமல் வாகனத்தை இயக்கிய கோதங்கி சுசித்ரா
தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்கள் மற்றும் நேபாளத்திலும் பசுமைப் பயணத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பும் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் பசுமை வனத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பதாக கூறுகிறார் பயணம் மேற்கொண்ட மற்றொரு பெண் சரவண செல்வி.
தமிழ்நாட்டை வனச்சோலையாக மாற்ற பல்வேறு அமைப்புகள் பல்வேறு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தாலும் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு முன்னெடுத்திருக்கும் இந்த புதுவித முயற்சி அனைவரின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.