முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 7ஆம் தேதி புதிய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தவுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணை கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அணையின் பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு குழுவும், துணை கண்காணிப்பு குழுவும் கலைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச்செயலர் விஸ்வாஸ் உள்ளிட்ட 7 பேர் உள்ளனர்.
இந்த புதிய குழு, வரும் 7ம் தேதி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்க்கசிவு காலரி உள்ளிட்ட பகுதிகளை குழு ஆய்வு செய்கிறது.