கொடைக்கானல் மலை பகுதியில் தீயணைப்பு வீரர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அதிகளவில் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. கோடைகாலங்களில் அதிகளவில் வெப்பநிலை காணப்படுவதால் கொடைக்கானலில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவதாகவும், கடந்தாண்டு ஏற்பட்ட காட்டுத்தீயால் கொடைக்கானலில் இருந்த அரியவகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் காட்டுத் தீ ஏற்படுவதாகவும், கொடைக்கானல் சுற்றி 10 இடங்களில் தீயணைப்பு வீரர்களை அதிகளவில் பணியமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கொடைக்கானலில் இணையதள சேவை தொடர்புகள் முறையாக கிடைக்காததால் வனத்துறையினரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறிய பொதுமக்கள், இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.