மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பாஜக இன்று தொடங்கியுள்ளது.
சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் கையெழுத்து இயக்கத்துடன் ‘சமக்கல்வி – எங்கள் உரிமை’ என்கிற இணையத்தளத்தையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் H ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், பொன் இராதாகிருஸ்ணன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்
இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தமிழக பாஜக சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, http://puthiyakalvi.in என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.