சென்னை சென்டரல் ரயில் நிலையம் வந்த வடமாநில விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்லும் நிலையில், வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாக இருக்கும் ரயில் நிலையங்களிலேயே கஞ்சா கடத்தி வரும் நபர்கள் இறங்கி விடுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் ரயில் நிற்கும் முன்பே இறங்கி சென்ற கல்லூரி மாணவர் உட்பட இருவரை மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இருவரும் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரும் கடத்தி வந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.