சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தஷ்வந்த் தொடர்ந்த மனு மீதான விசாரணையை, வரும் 27ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமியை தஷ்வந்த் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்தார்.
இந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த அவர், செலவுக்கு பணம் கொடுக்கவில்லை எனக் கூறி தனது தாயையும் கொலை செய்தார்.
மீண்டும் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
2019ஆம் ஆண்டு வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகலை இருதரப்புக்கும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, விரிவான விசாரணைக்காக வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.