அரக்கோணம் CISF தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மைய தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு அரக்கோணம் வருகிறார்.
மாலை 6.25 மணிக்கு டெல்லியில் இருந்து BSF விமானத்தில் புறப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தை இரவு 9.05 மணிக்கு அமித்ஷா வந்தடைகிறார்.
அங்கிருந்து காரில் புறப்பட்டு தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மையத்திற்கு சென்று இரவு தங்குகிறார். பின்னர், நாளை காலை 8 மணிக்கு CISF உதய தினவிழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி, ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தடை விதித்துள்ளார்.