கோவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுதிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் சாலையில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில், இங்கு உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்ற போது ஒரு சிலரின் புகைப்படம் மற்றும் கைரேகையும், தேர்வு எழுதியவர்களின் கைரேகையும் மாறுபட்டு இருந்தது. இதனை அறிந்த அதிகாரிகள், 8 பேர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை கண்டுபிடித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷிருமார், பிபன்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மேலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத உதவியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.